முட்டை லாரி விபத்து: உடைந்து ரோட்டில் ஆறாக ஓடிய 1 லட்சம் முட்டைகள்.. ஓடி, ஓடி அள்ளிய மக்கள்.
தமிழ்நாடு :
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பனிமூட்டதால் லாரி விபத்துக்குள்ளானதி்ல் அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,10,000 முட்டைகள் உடைந்து தெருவில் ஆறாக ஓடியது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முட்டை வியாபாரி நந்தகுமார்(42).அவர் நேற்று நாமக்கல்லுக்கு சென்று அங்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,10,000 முட்டைகளை வாங்கி அதை மினி லாரியில் ஏற்றி சென்னைக்கு கிளம்பினார். ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த டிரைவர் கண்ணன்(28) லாரியை ஓட்டினார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு லாரி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளையனூரில் சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டமாக இருந்ததால் சாலை சரிவரத் தெரியவில்லை. அந்நேரம் கார் ஒன்று லாரியை முந்த முயன்றபோது டிரைவர் லாரியை இடப்பக்கமாகத் திருப்பினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது மினி லாரி மோதியது. பனி மூட்டத்தால் ட்ரெய்லர் லாரி நின்றதை கண்ணன் கவனிக்கவில்லை.
இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த முட்டைகள் உடைந்து தெருவில் ஆறாக ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த பக்கத்து கிராமத்தினர் ஓடி வந்து முட்டை கூழ்களை பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர்.
விபத்தில் லாரி டிரைவர் கண்ணன், நந்தகுமார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக