புதிய பள்ளிவாசல் மீது மரத்தை வெட்டி வீழ்த்தி மீண்டும் தாக்குதல்.
ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெலும்புகொல்ல புதிய பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்றிரவும் அப்பள்ளிவாசல் மீது தென்னை மரம் ஒன்றை வெட்டி வீழ்த்தி அதன் கூரையினை சேதப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டைத் தெரிவிக்கும்பொருட்டு கொக்கெரெல்ல பொலிஸ் நிலையபத்திற்குச் சென்ற இருவரை பொலிஸார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இப்பள்ளிவாசலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் அப் பகுதியின் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவரும் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பாதிப்புக்குள்ளான புதிய பள்ளிவாசலைச் சேர்ந்த பெண்கள் இன்று காலை ரிதிகம பிரதேச செயலகத்திற்குச் சென்று தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 தாய்மார்களும் 20 ஆண்களும் இணைந்து குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபரைச் சந்தித்து தமது பள்ளிவாசலுக்கு இடையூறு விளைவிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து பள்ளிவாசலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருதாகவும் இதன்போது குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குருநாகல் பொலிஸ் நிலையத்திலிருந்து விசேட பொலிஸ் அணியினர் தெலும்புகொல்ல புதிய பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்பொருட்டு நாளை பிரதிப் பொலிஸ் அலுவலகத்திற்கு இரு தரப்பினரையும் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி : விடிவெள்ளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக