என்ன நடந்தது ஓட்ட வீராங்கனை சுசந்திகாவுக்கு? மர்மமான முறையில் சிங்கப்பூரில் மாயம்!.
ஒலிம்பிக் போட்டியில் (2000 சிட்னி) இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க மிகவும் மர்மமான முறையில் சிங்கப்பூரில் வைத்து காணாமல் போய் உள்ளார்.
ஆசிய பெண்கள் மெய்வல்லுனர் விளையாட்டு மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று ஆரம்பம் ஆனது. எதிர்வரும் 05 ஆம் திகதி நிறைவடைகின்றது.
இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சபையால் இம்மாநாட்டுக்கு சுசந்திகா ஜயசிங்க அனுப்பப்பட்டார். விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேதான் சுசந்திகா ஜயசிங்கவின் பெயரை சிபாரிசு செய்து இருந்தார்.
இவருக்கான பிரயாண செலவுகளை இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சபை பொறுப்பேற்று இருந்தது. இது 80000 ரூபாய்க்கும் அதிகம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கடந்த 31 ஆம் திகதி அதிகாலை 1.05 மணிக்கு சிங்கப்பூர் எயர் லைன்ஸில் சுசந்திகா ஜயசிங்க புறப்பட்டு இருந்தார். விமானம் சிங்கப்பூரில் சில மணி நேரங்கள் இடையில் தரித்து நின்றது. பின் காலை 9.30 மணிக்கு பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டது.
விமானம் ஜகார்த்தாவை வந்தடைந்தது. ஆனால் சுசந்திகா ஜயசிங்கவை காணவில்லை. இவர் ஜகார்த்தாவை வந்தடையவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இவருக்கு தடபுடல் வரவேற்பு வழங்க விமான நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.
சிங்கப்பூரில் வைத்து சுசந்திகா ஜயசிங்க தலைமறைவாகி இருக்கக் கூடும் என்றே பெரிதும் சந்தேகிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக